கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கடலூர் மாவட்டம் குண்டு உப்பலவாடி கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்காக, முன்னாள் ஊராட்சித் தலைவர் மாசிலாமணியின் மனைவி பிரவீனா போட்டியிட்டார். இருப்பினும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மதியழகன் என்பரின் மனைவி சாந்தி வெற்றிபெற்றார். இதனால் மதியழகன் தரப்பினருக்கும், மாசிலாமணியின் தரப்பினருக்கும் நீண்ட நாள்களாக மோதல் இருந்துவந்தது. இந்த மோதல் தற்போது கொலையில் முடிந்துள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் கலவரம் ஏற்பட்டுள்ளது.
நேற்றிரவு 9 மணியளவில் மாசிலாமணியின் தம்பி மதிவாணன் (36) கண்டக்காட்டிலிருந்து தாழங்குடா நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த பத்து பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் பலத்த காயமடைந்த மதிவாணன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மதிவாணன் கொலை செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த மாசிலாமணியின் ஆதரவாளர்கள், தாழங்குடா கிராமத்திலுள்ள வீடுகளை அடித்து நொறுக்கி, அவற்றுக்கு தீ வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி அங்கிருந்த 25க்கும் மேற்பட்ட படகுகள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டற்றிக்கும் தீ வைத்து கொளுத்தினர்.
கலவரத்தைக் கட்டுப்படுத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட காவலர்கள் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, மதிவாணனின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூறாய்விற்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த கலவரம் தொடர்பாக மதியழகன் தரப்பைச் சேர்ந்த 12 பேர் மீதும், மாசிலாமணி தரப்பைச் சேர்ந்த 50 பேர் மீதும் என மொத்தம் 62 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அப்பகுதியில் மீண்டும் கலவரம் ஏற்படாமல் இருக்க ஆறு தனிப்படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். வீடுகளுக்கும், படகுகளுக்கும் தீ வைக்கப்பட்டதில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீக்கிரையாகியுள்ளன. மேலும், இந்த கலவரத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியை வருவாய்த் துறையினரும் மீன் வளத்துறையினரும் தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க:கடலூரில் கலவரம்: முன்னாள் தலைவர் தம்பி வெட்டிக் கொலை... வீடுகள், படகுகளுக்கு தீ வைப்பு!