கடலூர் வட்டம் சுரங்கத் துறை உதவி இயக்குனராக பணியாற்றிவருபவர் லலிதா. இவர் இன்று காலை கடலூரிலிருந்து விருதாச்சலம் நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தார். அதேபோல் கடலூர் வேளாண் துறை உதவி இயக்குனராக பணியாற்றி வருபவர் பார்த்தசாரதி. இவர் வடலூரிலிருந்து கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இந்த இரு கார்களும் கடலூர் அருகே அண்ணவல்லி கிராமத்தில் சென்றுகொண்டிருந்தபோது சுரங்கத் துறை உதவி இயக்குனர் லலிதாவின் கார் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்லும்போது எதிரே வந்த வேளாண் துறை உதவி இயக்குனர் பார்த்தசாரதி காரின் பக்கவாட்டில் மோதியது.
இதில் லலிதாவின் கார், சாலையில் உருண்டு சென்றது. அப்போது அந்த பகுதியில் சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த மக்கள் மீது மோதியது. கார் உருண்டு வருவதைக் கண்ட மக்கள் அங்கும் இங்குமாக சிதறி ஓடினர், இதில் அதே பகுதியை சேர்ந்த வீரமுத்து என்பவர் மீது கார் மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், ஏழு பேர் படுகாயமடைந்தனர்.
அதுமட்டுமின்றி காரில் இருந்த லலிதா, அவரது ஓட்டுனர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து காரிலிருந்த வேளாண்மை உதவி இயக்குனர் பார்த்தசாரதி கூச்சலிடவே அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் காரின் கண்ணாடியை உடைத்து அவரை மீட்டனர் இதில் சிறு காயத்துடன் உயிர் தப்பினார்.
இதனைத் தொடர்ந்து படுகாயமடைந்த ஏழு பேர் உள்பட அனைவரையும் பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த விபத்து குறித்து கடலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: புதிதாக அமைக்கப்பட்ட தீயணைப்பு நிலையம்: காணொலி மூலம் திறந்துவைத்த முதலமைச்சர்!