கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் செயல்பட்டுவருகின்றது. இந்த நிறுவனத்தில், சுமார் 13 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அனல் மின் நிலைய தெர்மல் இரண்டில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வரும் நிலையில், இன்று காலை முதல் அனல்மின் நிலையத்தில் பணிகள் நடைபெற்றுவந்தன.
அப்போது தெர்மல் இரண்டிலுள்ள சுவிட்ச் யார்டு திடீரென பழுதடைந்து தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து வெடி விபத்து ஏற்பட்டது. சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த என்எல்சி தீயணைப்புத் துறையினர், விபத்து ஏற்பட்ட இடத்தில் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது தீ விபத்தில் சிக்கிய ஊழியர்கள் 8 பேரை மீட்டு, என்எல்சி பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பற்றிய தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாததால் கூடுதலாக 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு என்எல்சி பகுதியிலிருந்து அனல் மின் நிலையத்திற்குச் செல்லக்கூடிய கன்வேயர் பெல்ட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு மின்சாரம் தடைப்பட்டு, நிலக்கரி எடுக்கும் பணிகள் பாதிக்கப்பட்டன. இந்தநிலையில், இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது அங்குப் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தீ விபத்தில் காயமடைந்த எட்டு பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால், மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: நெய்வேலி என்எல்சியில் பாய்லர் வெடித்து விபத்து!