கடலூர் மாவட்டத்தின் மையப்பகுதியில் சித்தூர் சாலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகமும் கிடங்கும் அமைந்துள்ளது. இங்கு மாவட்டத்திலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளுக்குத் தேவையான பொருள்கள் இருப்பு வைக்கப்படுவதுடன் இவற்றுக்கான ஆவணங்களை நிர்வகிக்கும் அலுவலகமாகச் செயல்படுகிறது.
இந்தத் தலைமை அலுவலகத்தில் இன்று காலை திடீரென நிர்வாக அலுவலகத்தின் முதல் தளத்தில், முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் தீ விபத்து ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் மூன்று மணி நேரமாகப் போராடி தீயை அணைத்தனர்.
இந்தத் தீ விபத்தில் பெரும்பாலான ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமாகின. தீ விபத்து தொடர்பாக கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? இல்லை வேறு யாரேனும் திட்டமிட்டு ஆவணங்களை அழிப்பதற்காக தீ வைத்தார்களா? எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: ஆம்பூர் குடோனில் தீ விபத்து - பல லட்சம் உதிரி பாகங்கள் எரிந்து நாசம்!