சென்னை போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என அடையாளம் தெரியாத நபர் ஒருவர், நேற்று முன்தினம் (ஜூன் 18) 108 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு மிரட்டல்விடுத்தார்.
இது குறித்து, தேனாம்பேட்டை காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வெடிகுண்டு வல்லுநர்களுடன் ரஜினிகாந்தின் வீட்டுக்குச் சோதனையிடச் சென்றனர்.
ஆனால் கரோனா தொற்று காரணமாக ரஜினிகாந்தின் வீட்டில் வல்லுநர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. பின்னர், ரஜினிகாந்தின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு அருகில் உள்ள அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதனால் மிரட்டல்விடுத்த நபரின் எண்ணை வைத்து அவரை தேனாம்பேட்டை காவல் துறையினர் தேடிவந்தனர். அந்த எண் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதி என்று கண்டுபிடிக்கப்பட்டு கடலூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்துசென்ற காவல் துறையினர், வெடிகுண்டு மிரட்டல்விடுத்தது மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவன் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
இதன் பிறகு சிறுவனின் பெற்றோரிடம் இதுபோன்று சம்பவம் நடைபெறாது என்று எழுதி வாங்கிக்கொண்டு, சிறுவனை காவல் துறையினர் விடுவித்துள்ளனர்.
இந்நிலையில் அச்சிறுவனின் தந்தை குலாம் பாட்ஷா சமூக வலைதளங்களில் நடிகர் ரஜினிகாந்திடம் மன்னிப்பு கேட்டு காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "மன்னிச்சிடுங்க ரஜினி சார், என் பையன் மனநலம் பாதிக்கப்பட்டவன். நானும் உங்கள் ரசிகன்தான். உங்கள் படம் எது வந்தாலும் உடனே சென்று பார்த்துவிடுவேன்.
அண்ணாத்த திரைப்படம் வந்தாலும் அதை முதல் ஆளாகப் பார்ப்பேன். வீட்டில் இருக்கும் செல்போனை வைத்து என் மகன் உங்களுக்கு மிரட்டல் விடுத்துவிட்டான். எங்களை மன்னித்துவிடுங்கள்" என்று தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க... ரஜினிக்கு மிரட்டல் விடுத்த சிறுவனுக்கு ரசிகர்கள் உதவிக்கரம்