மனிதனின் பொதுமொழி பசி. இந்த பசி, கும்பகோண இளைஞரை துபாய் ஹோட்டலில் வேலை பார்க்க வைக்கும், சோழ நாட்டு விவசாயியை சென்னையில் ஆட்டோ தொழிலாளியாக்கும், கல்லூரி ஆசிரியரை முறுக்கு சுட்டு விற்க வைக்கும்.
அப்படி முறுக்கு சுட்டு விற்று வருபவர்தான் நெய்வேலியைச் சேர்ந்த மகேஷ்வரன். நான்கு மாதங்களுக்கு முன்னதாக கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் துறை தலைவர், இப்போது முறுக்கு வியாபாரி. அப்படிதான் தன்னை அடையாளப் படுத்திக்கொள்கிறார் மகேஷ்.
கரோனா வைரஸ் பலரின் வாழ்வில் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது. வைரஸ் பரவல் காரணமாக மார்ச் மாதம் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், அதற்கு முன்னதாகவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் பல கல்லூரிகள் அதன் ஆசிரியர்களுக்கு விடுப்புக் கொடுத்து அனுப்பியுள்ளது. அது என்ன விடுப்பு என்றால், அட்மிஷன் விடுப்பு.
அட்மிஷன் விடுப்பு என்றால் என்ன? அட்மிஷன் விடுப்பு என்பது தங்களது கல்லூரிகளுக்கு மாணவர்களை அழைத்துவரும் வேலையைதான் ஆசிரியர்கள் செய்ய வேண்டும். மகேஷ்வரனுக்கு கொடுக்கப்பட்டது அந்த வேலைதான். 5 அட்மிஷன்களைக் கொண்டு வந்தால், வேலை நிச்சயம். இல்லையென்றால், வேலை இல்லை என்பதே கல்லூரியின் பதில். இதனிடையே சில கல்லூரிகளுக்கு மகேஷ்வரன் விண்ணப்பித்திருந்தாலும், அவர்களும் அதே பதிலைதான் கூறியுள்ளனர். அப்படி மாணவர்களை கல்லூரியில் சேர்த்துவிட்டால் எவ்வளவு சம்பளம் என்றால், குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரமே.
நான்கு மாதங்களாக சம்பளம் இல்லாமல் தவித்து வந்த மகேஷ்வரன் நிலை, நாளுக்கு நாள் மோசமடைந்துள்ளது. ஒரு கட்டத்தில் அன்றாட வாழ்வாதாரத்திற்கே பிரச்னை எழுந்தபோதுதான் முறுக்கு சுட்டு விற்கலாம் என்ற யோசனை வந்துள்ளது.
ஆனால், அதற்கு மனைவிதான் காரணம் என கூறுகிறார் மகேஷ். கரோனா வைரசால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நாள்களில் மகேஷின் மனைவி, ஒருநாள் முறுக்கு சுட்டு சாப்பிடக் கொடுத்துள்ளார். அந்த முறுக்கின் சுவை அதிகமாக இருக்க, இதனை ஏன் கடையில் வைத்து விற்கக்கூடாது என சிந்தித்து களமிறங்கியுள்ளார்.
அப்படி கடையில் முறுக்கு சுட்டு விற்றவரிடம் மக்கள் தொடர்ந்து வாங்க, இன்று ஒரு நாளுக்கு ரூ.800 வரை விற்பனையாவதாகக் கூறுகிறார். இது ஊரடங்கு காலத்தில் மிகவும் உபயோகமாக இருப்பதாகவும், தன்னைப் போல் வேலையை இழந்தவர்கள் தொழில் செய்து முன்னேறலாம் என நம்பிக்கையாக பேசுகிறார்.
இதையும் படிங்க: உரிய விலை இல்லாததால் செடியிலேயே வெடித்து வீணாகும் பருத்தி - வேதனையில் விவசாயிகள்