திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம், விருத்தாசலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும் திட்டக்குடி சட்டப்பேரவை உறுப்பினருமான கணேசன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஒன்று கூடி தேர்தல் பணியாற்றி வேட்பாளரை வெற்றி பெற செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அப்போது கடலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான திமுக வேட்பாளரான ரமேஷ் பேசியதாவது, "மத்தியில் ராகுல் காந்தி ஆட்சி அமைத்தால் தமிழ்நாட்டில் தேர்தலே தேவை இல்லை ஸ்டாலின்தான் முதலமைச்சர். ஆகவே நாற்பது தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும். கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்த மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து என்னை வெற்றி பெறச் செய்தால், கடலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பிரச்னைகளை தீர்க்க உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பேன். தொகுதி பிரச்னைகள் குறித்து எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொண்டு கருத்து தெரிவிக்கலாம்", என பேசினார்
கூட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் முத்துக்குமார் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், மற்றும் திமுகவின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.