கடலூர் மாவட்டம் சிதம்பரம் மாலை கட்டி தெருவைச் சேர்ந்தவர் உமா ராணி (53). அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பேராசிரியராகப் பணிபுரிந்து வரும், இவர் சிதம்பரம் முத்தையாநகரில் கடந்த 1998ஆம் ஆண்டு 2,400 சதுர அடி பரப்பளவுள்ள மனை ஒன்றை வாங்கியிருந்தார்.
இவருக்குச் சொந்தமான இந்த மனையை எவ்வித உரிமையும் இல்லாமல் சிதம்பரம் தேரடி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், பன்னீர்செல்வம்(68) என்பவருக்கு போலி ஆவணம் தயார் செய்து, கிரயம் செய்து கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் உமா ராணிக்குச் சொந்தமான நிலத்தை பன்னீர் செல்வம் உரிமை கொண்டாடியதால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து உமா ராணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ்விடம் அளித்த புகாரின் அடிப்படையில் நிலஅபகரிப்பு தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் ஈஸ்வரி, உதவி ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இதில் கிரயம் எழுதிக் கொடுத்த முக்கிய குற்றவாளியான ராதாகிருஷ்ணன் இறந்துவிட்ட காரணத்தினால், பன்னீர்செல்வம் கடந்த அக்டோபர் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மேலும் உமா ராணிக்குச் சொந்தமான காலிமனைக்கு அப்போது, வில்லங்கமில்லா சான்று வழங்கிய துணை பதிவாளார் ராஜ ரத்தினம் (57) கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் தஞ்சாவூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் நிர்வாகப் பொறுப்பாளாராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:
சீரியல் கில்லர் மோகன் மேலும் ஒருவழக்கில் குற்றவாளி - மங்களூரு நீதிமன்றம் உத்தரவு