கடலூர்: கடலூர் மாவட்டம் எம்.புதூர் கிராமத்தில் மோகன் ராஜ் என்பவர் நாட்டு வெடி பட்டாசு தயாரிக்கும் கொட்டகையை வைத்துள்ளார். கோயில் திருவிழாக்கள் மற்றும் சுப, துக்க நிகழ்ச்சிகளில் வெடிக்க பயன்படுத்தும் நாட்டு வெடி பட்டாசுகளை தயாரிக்கும் பணியில் மூன்று பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் என ஐந்து பேர் நேற்று பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடி பட்டாசுகள் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியில் இருந்த ஐந்து பேரும் சிக்கினர். இந்த வெடிவிபத்தில் நெல்லிக்குப்பத்தில் சேர்ந்த அம்பிகா (50) மற்றும் பெரிய காரைக்காடு கிராமத்தைச் சேர்ந்த சித்ரா (35), சி.என் பாளையத்தை சேர்ந்த சத்யராஜ் (34) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், வசந்தா என்ற பெண்ணும், வைத்திலிங்கம் என்பவரும் படுகாயமடைந்து கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், காயமுற்றவர்களில் ஒருவரான வசந்தா சிகிச்சை பலனின்றி இன்று (ஜூன் 24) அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து ப உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கடலூர் முதுநகர் காவல் துறையினர் நாட்டு வெடி தயாரிக்கும் கொட்டகையின் உரிமையாளர் மோகன்ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர். முன்னதாக, கடலூர் பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 3 லட்சம் நிவாரணத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கடலூர் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து - முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு