கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது வீராணம் ஏரி. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரியின் மூலம் கடலூர் சுற்றுவட்டராப்பகுதியில் உள்ள 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அது மட்டும் இல்லாமல் வீராணம் ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காகவும் நீர் அனுப்பப்பட்டு வருகிறது.
மேலும், மழைக்காலங்களில் நீர்வரத்து அதிகமானதால் வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதனால் சென்னைக்கு 74 கன அடி நீர் அனுப்பப்பட்டு வந்தது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமானால் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். இதற்காக கடந்த மார்ச் 31-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த தண்ணீர் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து கடந்த 7-ஆம் தேதி கீழணைக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு நேற்று முதல் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டதையடுத்து வீராணம் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்தது. இதனால், 44.3 அடியாக இருந்த வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46.25 அடியாக உயர்ந்தது.
நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 60 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்படுகிறது.