கடலூர் மாவட்டம் ஜவான் பவான் சாலையில் இளைஞர் ஒருவர் காவலர் சீருடையில் அந்த வழியாகச் சென்ற இருசக்கர வாகனங்களை வழிமறித்து பணம் வசூல் செய்துள்ளார். இதுகுறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவின்பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் ஆய்வாளர் கதிரவன் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு காவலர் சீருடையில் பணம் வசூல் செய்துகொண்டிருந்தவரைப் பார்த்த காவலர்கள், அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவலர்கள் அவரை திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ராதாபுரத்தைச் சேர்ந்த இளவரசன் (30) என்பதும் காவலர் சீருடை அணிந்துகொண்டு இருசக்கர வாகனங்களில் செல்பவர்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து காவல் துறையினர் இளவரசன் மீது வழக்குப்பதிந்து கைதுசெய்தனர். மேலும் அவரிடம் இருந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதேபோல் இளவரசன் வேறு எங்கேயாவது காவலர் சீருடை அணிந்துகொண்டு வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படியுங்க: லாரியில் கடத்திவரப்பட்ட எரிசாராயம் - ஏரியில் கொட்டி அழித்த காவலர்கள்