கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை 4,633 பேர் பாதிக்கப்பட்டும், 60 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இதனால் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பெண் நில அளவையர் ராஜேஸ்வரி என்பவர், மூச்சுத் திணறல் காரணமாக கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 9) அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். பெண் நில அளவையர் கரோனாவால் உயிரிழந்த சம்பவம் வருவாய்த்துறை அலுவலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, விருத்தாச்சலம் பகுதியில் பணிபுரிந்து வந்த தாசில்தார் கவியரசு என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனாவால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.