கடலூர்: மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து கடலூரில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மின்சார சட்டத் திருத்தம் 2020, விவசாயிகளை சீரழிக்கும் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும், பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையை கண்டித்தும், நலவாரிய இணையப் பதிவை எளிமைப்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என்றும்;
பொது ஊரடங்கு காரணமாக வருமானம் இழந்த கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு குடும்பத்திற்கு மாதம் 7,500 ரூபாய் வழங்க வேண்டும் என்றும்; உணவுப்பொருட்களை ஆறு மாதத்திற்கு இலவசமாக வழங்கிட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் மு.சு. பொன்முடி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் பி. கருப்பையன், மாவட்டத் தலைவர் டி. பழனிவேல் உள்பட நிர்வாகிகள் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.