உலக குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் இன்று உலகம் முழுக்க அனுசரிக்கப்பட்டுவருகிறது. தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் வாரியாக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டுவருகிறது.
கடலூர் நகர அரங்கில் குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான கையெழுத்து இயக்கம், உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பேரணி நடைபெற்றது. இப்பேரணிக்கு மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இதில் தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கடலூர் நகர அரங்கில் புறப்பட்டு முக்கியச் சாலைகள் வழியாக சென்று கடலூர் மஞ்சை நகர் மைதானம் வரை இந்த விழிப்புணர்வுப் பேரணி வந்தடைந்தது.
இந்தப் பேரணியில் குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் மாணவர்கள் சென்றனர்.