சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சமீபத்தில் நடந்த தொழிலதிபர் இல்ல திருமண விழா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆகம விதிகளை மீறி திருமணத்திற்கு அனுமதி அளித்ததாக கோயில் தீட்சிதர்கள் மீது காவல் துறை மற்றும் வருவாய் துறையில் பத்துக்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன.
இந்த சம்பவத்தைக் கண்டித்தும், தீட்சிதர்களை கைது செய்யக் கோரியும் பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிச்சாவரம் பாளையக்காரர்களான சோழ வம்சாவளியைச் சேர்ந்த வாரிசு மன்னர் மன்னன் என்பவர் இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த புகார் மனுவில், 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை சிதம்பரம் நடராஜர் கோயிலின் சாவி, பிச்சாவரம் சோழர் வம்சாவளி பாளையக்காரர் அரண்மனையிலேயே இருந்ததாகவும், அங்கிருந்துதான் தினமும் தீட்சிதர்கள் சாவியை பெற்றுக் கொண்டு கோயிலுக்கு எடுத்து வந்து கோயிலை திறந்து பூஜைகள் செய்துவிட்டு, பின்னர் மீண்டும் தங்களிடம் வந்து ஒப்படைத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு கட்டத்துக்கு மேல் தீட்சிதர்களே சாவியை வைத்துக்கொண்டனர் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கோயில் தீட்சிதர்கள் பல்வேறு நடைமுறைகளை மாற்றி இருப்பதால், தீட்சிதர்கள் மீது நம்பிக்கை இல்லை எனவும், அதனால் அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு கோயில் தீட்சிதர்களிடமிருந்து சாவியை வாங்கி தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் மனுவில் மன்னர் மன்னன் குறிப்பிட்டுள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த திருமண விவகாரம் தீட்சிதர்கள் மீது கடும் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் கோயில் தங்களுக்குச் சொந்தம் என்றும், அதனால் சாவியை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் எனவும் பிச்சாவரம் பாளையக்காரர்களான சோழ வம்சாவளி வாரிசுகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: ஆட்டோ ஓட்டுநர் கொடூரமாக வெட்டிக் கொலை... சக ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்...