தேனி மாவட்டம் அல்லிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் தனது குடும்ப உறவினர்கள் உடன் சென்னை நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தார். காரில் ஓட்டுநர் உள்பட ஐந்து பேர் இருந்தனர்.
விருத்தாசலம் அடுத்த ஆவட்டி கிராமத்திற்கு அடுத்துள்ள கல்லூர் ஓடை பாலத்தில் சென்றபோது எதிர்பாராத விதமாக, ஏற்பட்ட விபத்தில் பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு தலைகீழாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் இருந்து 55 வயது மதிக்கத்தக்க பெண் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் விபத்துக்குள்ளானவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கார் தீப்பற்றி எரிந்தது. இதில் கார் ஓட்டுநர் சுப்பிரமணியன் வெளியே வர முடியாமல், தீயில் கருகி உயிரிழந்தார்.
காரில் பயணித்த முத்துக்குமார் (40), அவரது மனைவி செல்வராணி (35) அவர்களது 8 வயது மகன் ஆத்விக்கை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முத்துக்குமாரின் மனைவி செல்வராணி உயிரிழந்தார்.
முத்துக்குமார், அவரது மகன் ஆத்விக் இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவ்விபத்து குறித்து ராமநத்தம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: எருதுவிடும் நிகழ்ச்சியில் மேற்கூரை இடிந்து விபத்து - சிறுமி உள்பட இருவர் உயிரிழப்பு