தமிழ்நாடு முழுவதும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி, டிசம்பர் 14ஆம் தேதி தொடக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, கடலூர் ஊராட்சிக்குட்பட்ட திருப்பணாம் பாக்கம் பகுதியில் அம்மா மினி கிளினிகை முதலமைச்சர் தொடக்கி வைத்தார். கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் "மக்களை தேடி மருந்தகம்" என்ற நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, கடலூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை சார்பில் மாவட்டம் முழுவதும் 27 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட உள்ளன. முதல்கட்டமாக, கடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி ஆகிய பகுதிகளில் அம்மா மினி கிளினிக் திட்டத்தை தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தொடக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, மினி கிளினிக்கில் நடைபெறும் மருத்துவ முறையை பார்வையிட்ட அமைச்சர், தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.
இந்த கிளினிக்கில் மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர் தலா ஒருவர் என மூன்று பேர் பணியில் உள்ளனர். மூன்று மாதங்களுக்கு தேவையான மருந்து பொருள்கள், உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன.