கடலூர் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் சிதம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “கேந்திரமான நான்கு துறைகளை மட்டும் கையில் வைத்துக்கொண்டு, மற்ற துறைகளில் உள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் மத்திய பாஜக அரசு விற்கப்போவதாக அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் இந்த முடிவு தேசிய இறையாண்மைக்கே பெரும் ஆபத்தை விளைவிக்கும்.
மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்து விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், மத்திய அரசோ ஒன்றரை ஆண்டுகள் அவற்றை அமல்படுத்த மாட்டோம் என்று கூறுகிறது.
அப்படியென்றால் அந்தச் சட்டங்களில் கோளாறு இருப்பதை மத்திய அரசும் உணர்ந்துள்ளது என்று தானே பொருள். சர்ச்சைக்குரிய அந்த சட்டங்களை மத்திய அரசு ஏன் கொண்டுவர வேண்டும்.
பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷில் கூட பெட்ரோல் விலை 50-60 ரூபாய் தான். ஆனால், இந்தியாவில் 92 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மக்களால் தாங்க முடியாத அளவுக்கு தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயைத் தொடுவதற்கு மத்திய அரசின் வரி விதிப்பே காரணம். உதாரணத்திற்கு, 100 ரூபாய் பெட்ரோலில் மத்திய, மாநில அரசுகள் 60 ரூபாயை வரியாக வசூலிக்கின்றன. குறிப்பாக மத்திய அரசின் வரி மூன்றில் இரண்டு பங்காக இருக்கிறது. மத்திய அரசு, உடனடியாக தனது வரியைக் குறைத்து, மக்கள் மீதான சுமையை நீக்க முன்வர வேண்டும்.
கார்ப்பரேட்களிடம் வசூலிக்க வேண்டிய வரியைக் குறைத்ததன் காரணமாக போதிய வருமானம் இன்றி தவிக்கும் மத்திய அரசு, அதனை ஈடுகட்டவே பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலையை ஏற்றியுள்ளது. மக்களின் மீது தாங்க முடியாத அளவுக்கு வரிச் சுமையை ஏற்றி இருக்கிறது. விவசாயிகள் உரிமைகள் பறிப்பு, தொழிலாளர் உரிமைகள் பறிப்பு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை என மத்திய அரசு எதைச் செய்தாலும், தமிழ்நாட்டை ஆளும் அதிமுக அரசு அதனை ஆதரிக்கும் அடிமை அரசாக இருக்கிறது.
வரும் தேர்தலில் மக்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் அரசை நாம் உருவாக்க வேண்டும். அதிமுக - பாஜக கூட்டணியை தோற்கடித்து, திமுக தலைமையிலான அரசை உருவாக்க வேண்டும்”என தெரிவித்தார்.
இதையும் படிங்க : இந்தியாவில் கரோனா இறப்பு விகிதம் குறைவு! - பிரதமர் பெருமிதம்!