கடலூர் மாவட்ட ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நேற்று (ஜூன் 24) நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு ஒன்றியக்குழுத் தலைவர் தெய்வ பக்கிரி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அய்யனார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி கவுன்சிலர்களும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் சன் கார்த்திகேயன், "கடலூர் ஒன்றியப் பகுதிகளில் கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள், அதன் செலவினங்கள் குறித்து விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும். பதினைந்தாவது நிதிநிலை அறிக்கையின்படி மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்தும் விரிவாக அறிக்கை வழங்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
அப்போது குறுக்கிட்ட அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் சலசலப்பு உண்டானது. அதையடுத்து பேசிய ஒன்றியக்குழுத் தலைவர் திமுக கவுன்சிலரின் கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவித்து கூட்டத்தை முடித்துவைத்தார்.
இதையும் படிங்க: பணத்தைப் பங்கு போட ஆலோசனைக்கூட்டம் நடத்திய திமுக!