கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 200 ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை மக்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு முழுவதும் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் பொதுமக்களுக்கு நேரடியாக கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
கடலூர் மாவட்டம் முழுவதும் 1,076 வாகனங்கள் மூலம் 528 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் காய்கறி விற்பனை குறித்தான புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் வெளியிட்டிருப்பதால் தமிழ்நாடு முழுதும் பல்வேறு பகுதிகளிலிருந்து தங்களுக்கு காய்கறிகள் வரவில்லை என தொலைபேசி வாயிலாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
வீடு தேடி காய்கறிகள், பழங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக விவசாயிகள் உற்பத்தி செய்த காய்கறிகள், பழங்களை மக்களுக்கு கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் புதியதாக 200 ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆக்சிஜன் தேவைப்படாத நோயாளிகளுக்காக கூடுதலாக 200 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் நாகப்பட்டினம் மாவட்ட கிராமமக்களும் பயனடைவார்கள்.
கடந்த சில நாள்களுக்கு முன் கடலூர் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 800க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். தற்போது முழு ஊரடங்கு காரணமாக கரோனா தொற்று எண்ணிக்கை 400ஆக குறைந்துள்ளது. இது பூஜ்ஜியமாக குறைந்திட பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: அனைவருக்கும் தரமான சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்- அமைச்சர் செந்தில் பாலாஜி