கடலூரில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன், அதிமுக கொள்கைபரப்புச் செயலாளர் வைகைச்செல்வன், தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய வைகைச்செல்வன், ' திமுகவுக்கு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பலத்த அடி கிடைத்தது. விக்கிரவாண்டியில் தாங்கள் பெரும் வெற்றி பெறுவோம் என்ற திமிரிலும் மமதையிலும் நாவடக்கம் இல்லாமல், முதலமைச்சரையும், துணை முதலமைச்சரையும் வாய்க்கு வந்தபடி ஸ்டாலின் பேசி வந்தார். பத்திரிகையாளர்கள் முகம் சுளிக்குமளவிற்கு முதிர்ச்சியற்ற பேச்சை அவர் உதிர்த்தார்.
விக்கிரவாண்டி திமுகவின் கோட்டை என்று நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், அந்தக் கோட்டையில் ஓட்டை விழுந்தபடி அதிமுக 45 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அவர் ஏதேதோ ஸ்டாலின் பேசிக்கொண்டு வருகிறார்.
தமிழ்நாடு அரசியல் வெற்றிடம் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறுவது தவறான கருத்து. வெற்றிடத்தை நிரப்பும் தகுதி காற்றுக்கு உள்ளது. தகுதியுள்ளது தப்பி பிழைக்கும் என்பது விஞ்ஞான பூர்வமான உண்மை. அதற்கு உதாரணம் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆவர். அவர்கள் தகுதியுள்ளவர்கள் என்பதால்தான் அதிமுகவும் தப்பிப் பிழைத்துள்ளது' என்றார்.
இதையும் படிங்க: ’ஆசிரியர்களின் கனவு நிறைவேறும் காலம் வெகுதொலைவில் இல்லை’ - அமைச்சர் செங்கோட்டையன் சூசகம்