நாகை மாவட்டம் கதிராமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுசித்ரா. இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை உடற்கல்வி பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மாலை பல்கலைக்கழக கழிவறையில், அவருடன் ஒன்றாக பயிலும் முத்தமிழன் எனும் மாணவன் சுசித்ராவின் மேல் ஆசிட் வீசியுள்ளார்.
இதனை அறிந்த சக மாணவர்கள் சுசித்ராவை மீட்டு சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.மேலும், ஆசிட் வீசிய முத்தமிழன் மீது சகமாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஆசிட் வீசியதின் பின்னணி
சுசித்ராவும், முத்தமிழனும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், சுசித்ரா வேறொருவரை காதலிப்பதாகக்கூறி, கடந்த சில நாட்களாக இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், முத்தமிழன் ஒரு வாரத்திற்கு விஷமருந்தியுள்ளார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர் சுசித்ராவிடம் பேச முற்பட்டபோது அவர் மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முத்தமிழன், பல்கலைகழத்தில் கழிவறை சுத்தம் செய்வதற்காக வைத்திருந்த ஆசிட்டை எடுத்து அவர் மீது வீசி உள்ளார் என்பது காவல் துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், சக மாணவர்கள் தாக்கியதில் காயமடைந்த முத்தமிழனை மீட்டு, சுசித்ரா அனுமதிக்கப்பட்டுள்ள அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ள காவல் துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.