கடலூர்: உலகப்பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பக்தர்கள், பொதுமக்கள் நன்கொடையாக பசுமாடுகள், கன்றுக்குட்டிகள், குதிரை, உள்ளிட்ட கால்நடைகளை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்நிலையில், கோயிலில் தற்போது 100-க்கும் மேற்பட்ட பசுமாடுகள் மற்றும் அஸ்வ பூஜைக்கு பயன்படுத்துவதற்காக ஒரு குதிரையும் உள்ளது.
இந்தக் குதிரையை ஜாக்கி என்பவர் பராமரித்து வருகிறார். குறிப்பாக நடராஜர் கோயிலில் பூஜைக்கு மட்டும் பயன்படுத்தப்படும் இந்த ’ராஜா’ என்ற குதிரையை இரவு நேரங்களில், குதிரையை பராமரிப்பு செய்துவரும் ஊழியர் துன்புறுத்தி ரேஸிங் பயிற்சி செய்வதாக தற்பொழுது பல்வேறு சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகப் பரவி வருகின்றது.
இது சம்பந்தமாக கோயில் நிர்வாகம் குதிரையை பராமரிப்பு செய்து வரும் ஊழியர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், அலட்சியத்தோடு கண்டுகொள்ளாமல் செல்வது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கோயில் நிர்வாகம் பூஜை செய்யும் குதிரையை துன்புறுத்தி வரும் ஊழியர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும்; பக்தர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இது சம்பந்தமாக சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தீட்சிதர் வெங்கடேசனை கேட்டபொழுது, “குதிரையினை பூஜைக்கு பயன்படுத்திய பிறகு ஒரே இடத்தில் கட்டி வைக்க முடியாது. அதற்குப் போதிய பயிற்சிகள் கொடுக்க வேண்டும். அதற்காக குதிரைக்காக சில பயிற்சிகள் கொடுக்கப்படுவது வழக்கம். ஆனால், தற்பொழுது சமூக வலைதளங்களில் குதிரையை தாக்குவதாகவும் தேவையற்ற வதந்திகளை நடராஜர் ஆலயத்தின் மீதும் தீட்சிதர்கள் மீதும் பழி சுமத்துகின்றனர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: டிடிஎஃப் வாசனை காண வந்த இளைஞர்கள் - 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீஸ்t: