நெய்வேலி என்எல்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 2008 ஆம் ஆண்டு கணக்குப்படி 10 ஆயிரத்து 632 தொழிலாளர்கள் ஒப்பந்தப் பணி செய்தனர். இவர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. பின்னர் 2012ஆம் ஆண்டு இன்கோ சொசைடியில் (தொழிலாளர் கூட்டுறவு சேவை சங்கம்) சேர்த்த பிறகு பணி நிரந்தரம் செய்வதாக ஒப்பந்தமானது. ஆனாலும் 2013 ஆம் ஆண்டு வரை பணி நிரந்தரம் செய்யாததால் தொழிற்சங்கத்தினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 2015 ஆம் ஆண்டு 300 தொழிலாளர்கள் நிரந்தரத் தொழிலாளர்களாக பணியமர்த்தப்பட்டனர். அதைத்தொடர்ந்து தற்போது 750 தொழிலாளர்களுக்கான சீனியாரிட்டி பட்டியலை என்எல்சி மனிதவளத்துறை அறிவித்துள்ளது. இதற்கான பெயர் பட்டியல் அனல் மின் நிலையம் சுரங்கம், அலுவலகப் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் உள்ள பெயர்களில் ஏதாவது ஆட்சேபனை இருந்தால், வரும் 8 ஆம் தேதிக்குள் என்எல்சி நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனை ஏதும் இல்லாத நிலையில், அவர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப்படும்.
இதையும் படிங்க: பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார் சகாயம்!