தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளுக்குப் பின் உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. அதன்படி வரும் டிசம்பர் 27, 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாகத் தேர்தல் நடக்கவுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்கியது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுகுப்பத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு ஏலம் நடத்தப்பட்டுள்ளது. அதன்படி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ. 50 லட்சத்திற்கும், துணைத் தலைவர் பதவி ரூ. 15 லட்சத்திற்கும் ஏலம் விடப்பட்டுள்ளது.
ஏலத்தில், தலைவர் பதவியை அதிமுக சக்திவேல் ரூ.50 லட்சத்திற்கும், துணைத்தலைவர் பதவியை தேமுதிகவைச் சேர்ந்த முருகன் ரூ.15 லட்சத்திற்கும் எடுத்ததைத் தொடர்ந்து, ஒருமனதாக அப்பகுதி மக்கள் அவர்களுக்கு ஆதரவாகத் தேர்வு செய்வதற்கான தீர்மானத்தை எடுத்தனர். இந்த ஏலத்தின் படி தேர்தலின்போது பதவிகளை ஏலம் எடுத்த சக்திவேல், முருகனைத் தவிர வேறு யாரும் போட்டியிட மாட்டார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த ஏலத் தொகையை வரும் 15ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்டவர்கள் ஊர் தலைவர்களிடம் செலுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது. ஜனநாயக ரீதியாக தலைவர் பதவியை தேர்ந்தெடுக்காமல் பணம் கொடுத்து பதவியை ஏலம் எடுத்திருப்பது பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கும் இவ்விவகாரம் சென்றது. இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசனிடம் இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: உள்ளாட்சி உங்களாட்சி 12 - உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு