கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குமராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார சுகாதார மருத்துவராகப் பணிபுரிபவர் குணபாலன். இவரும், வாண்டையார் இருப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரியும் மருத்துவர் விக்கிரமன் என்பவரும் சிதம்பரம் அண்ணாமலை நகர் கரோனா நோய் சிகிச்சை மையத்தில் கடந்த ஒரு மாதமாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக மருத்துவர் விக்கிரமனுக்கு வட்டார மருத்துவ அலுவலர் குணபாலன் விடுப்பு அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அவரிடம் அனுமதி மறுக்கப்பட்டதால், துறை சார்ந்த உயர் அலுவலரிடம் முறையிட்டு, பின்னர் அவர்களின் அனுமதியுடன் விடுப்பு பெற்றபின் விக்கிரமன் வாண்டையார் இருப்பு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று பணியில் ஈடுபட்டுள்ளார்.
மருத்துவரை தாக்கிய மூவர்
இதனால் ஆத்திரமடைந்த மருத்துவர் குணபாலன், கார் ஓட்டுநர் பாலமுருகன், ஒப்பந்த மருத்துவ உதவியாளர் சிவா ஆகியோருடன் வாண்டையார் இருப்பு கிராமத்தில் பணியில் இருந்த விக்கிரமனை தாக்கியுள்ளனர்.
இதில் விக்கிரமன் நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள் இவர்களை தடுத்து நிறுத்தி, குமராட்சி காவல் நிலையத்திற்கு தகவலளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்த விக்ரமனை சிதம்பரம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட மருத்துவர் குணபாலன் உள்ளிட்ட மூவரையும் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டதில், மருத்துவரை தாக்கியது உறுதியானதை அடுத்து மூவரையும் கைதுசெய்தனர்.