கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வேளக்குடி கிராமத்தில் இருக்கும் வாய்க்காலில் பெரிய முதலை ஒன்று இருப்பது பொதுமக்களுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில், வனத்துறை வனவர் அஜிதா தலைமையிலான அலுவலர்கள் அப்பகுதியில் விரைந்து சென்று வாய்க்காலில் உள்ள 450 கிலோ எடையுள்ள 15 அடி நீளமுள்ள முதலையை உள்ளூர் விவசாயிகள், வனத்துறை பாதுகாவலர் உதவியுடன் வலை போட்டு பிடித்தனர்.
பிடித்துவைத்திருந்த முதலையை சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி ஏரியில் விட்டனர். வனத்துறையினர் சரியான நேரத்தில் வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மிகப்பெரிய முதலையை பிடித்ததால் அப்பகுதியில் பொதுமக்கள், விவசாயிகள் நன்றியை தெரிவித்துள்ளனர்.
2 மாதங்களில் 10 முதலைகள்
கடந்த இரண்டு மாதங்களில் சிதம்பரம் வனத்துறை மூலம் பத்துக்கும் மேற்பட்ட ராட்சத முதலைகளை நீர்நிலைகளில் இருந்து பிடித்து, வக்காரமாரி ஏரியில் விட்டுள்ளனர்.
சிதம்பரத்தில் சுற்றியுள்ள நீர்நிலைகள் அனைத்திலும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய ராட்சத முதலைகளை பிடித்து முதலை பண்ணையில் விட வேண்டும். கடலூர் மாவட்டத்திற்கான முதலை பண்ணையை விரைவில் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைகள் வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: 18 years of Kadhal Kondean: எளிய கதாநாயகனின் காதல் கதை!