தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருள்கள் எடுத்துச் செல்லக் கூடாது, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தல், பரிசு பொருள் கொடுக்க தடை போன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கும் பணியில் பறக்கும் படையினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அம்மாவட்ட நிர்வாகத்தினர் வாகன சோதனைகளை மேற்கொண்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடலூர் எல்லை பகுதியில் நேற்று (மார்ச்2) வட்டாட்சியர் நாராயணன் தலைமையில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, புதுச்சேரியிலிருந்து கடலூரை நோக்கி வந்த வாகனத்தை அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர். அவ்வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் 1.30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டுப்புடவைகள் எடுத்துவரப்பட்டது கண்டறியப்பட்டது. உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் அவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
வாகனத்தை ஓட்டிவந்தவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், புடவைகள் அனைத்தும் ஆந்திரப்பிரதேச மாநிலத்திலிருந்து புதுச்சேரியில் உள்ள போத்தீஸ் துணிக்கடைக்கு கொண்டுவரப்பட்டதாகவும், அந்நிறுவனம் புடவைகளை நிராகரித்ததால் அவற்றை மறு விற்பனை செய்ய சேலம் எடுத்துச்செல்லும் வழியில் கடலூரில் வாகன தணிக்கையில் பிடிக்கப்பட்டதாக கூறினர். பறிமுதல் செய்யப்பட்ட புடவைகள் அனைத்தும் கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இதையும் படிங்க : தேர்தல் விதிகளை மீறுவோர் மீது புகாரளிக்கலாம்: ஆணையர் ஆஷா அஜீத்