கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை அடுத்த நரசிபுரம் ஜவ்காடு பகுதியில் வனத் துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த வகையில் வனக்காப்பாளர் நேருதாஸ் வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலம் வழியாக ரோந்தில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு நான்கு பேர் மது அருந்திக்கொண்டிருந்துள்ளனர்.
அப்போது அவர்களிடம், மது அருந்தக்கூடாது என்றும் யானைகள் நடமாடும் பகுதிகள் என்பதால் கீழே வீசப்படும் கண்ணாடி பாட்டில்களால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் பாதிப்புக்குள்ளாகும் எனவும் நேருதாஸ் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மது போதையில் நேருதாஸைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதனையடுத்து அவர்களிடமிருந்து தப்பிய வனக் காப்பாளர் அருகிலிருந்த விவசாயிகளை உதவிக்கு அழைத்துள்ளார்.
அங்கு வந்த விவசாயிகள் இதுகுறித்து கேள்வியெழுப்பியபோது, அவர்களையும் அந்த நபர்கள் தாக்க முற்பட்டுள்ளனர். இதனையடுத்து அங்கு திரண்ட கிராம மக்கள் நான்கு பேரையும் மடக்கிப்பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து அவர்களின் காரைப் பறிமுதல் செய்து, நால்வரையும் இருட்டுப்பள்ளம் பகுதியிலுள்ள பூலுவம்பட்டி வனச்சரக அலுவலகத்திற்குக் அழைத்துவந்து, வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், அவர்கள் வடவெள்ளியைச் சேர்ந்த ராஜேஷ், பாபு, பி.என். புதூரைச்சேர்ந்த அருண்குமார், கணுவாயைச் சேர்ந்த அருண் பிரசாத் என்பதும், அவர்கள் அதிமுகவில் உறுப்பினர்களாக இருப்பதும் தெரியவந்தது. வனக்காப்பாளர் கொடுத்த புகாரின் பேரில் அங்கு வந்த ஆலந்துறை காவல் துறையினர் நால்வரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.
இதுகுறித்து வனத்துறை ஊழியர்கள் கூறுகையில், ”தற்போது வனக்காப்பாளருக்கு ஏற்பட்ட நிலை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். ஆளும் கட்சித் தரப்பிலிருந்து அழுத்தம் வந்ததால், அவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. அரசுப் பணியில் இருக்கும் எங்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில், பொதுமக்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது” என்றனர்.