கோயம்புத்தூர் ஆலந்துறை இருட்டுப்பள்ளத்தைச் சேர்ந்தவர் நடராஜ்(55). அவர் போளூவாம்பட்டி வனச்சரகத்தில் வனக்காப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். கரோனா ஊரடங்கு காரணமாக நேற்று அவர் சாடிவயல் வனத்துறை சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவரை நிறுத்தி விசாரிக்கையில் அவர் மது அருந்தியிருப்பது தெரியவந்தது.
அதையடுத்து நடராஜ், அந்த இளைஞரிடம் ஊரடங்கு அமலில் இருப்பதால் எங்கும் செல்ல அனுமதியில்லை எனத் தெரிவித்துள்ளார். அதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே அந்த இளைஞர், நடராஜை மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார்.
அதைக்கண்ட சக காவலர்கள் அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, இளைஞரைப்பிடித்து காருண்யா நகர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டார். காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் அவர், கோயம்புத்தூர் மாவட்டம் கல்கொத்திபதி பகுதியை சேர்ந்த நந்தகுமார் (22) என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: மல்லிகைப்பூ தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது!