தமிழ்நாட்டில் கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் ஆட்டோக்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளதால் கேரளாவிலிருந்து கோவை வழியாக வரக்கூடிய வாகனங்கள் கடந்த சில நாட்களாக கோவை மாவட்டம் வாளையாறு வழியாக உள்ளே அனுமதிக்கப்படவில்லை, கேரளாவில் நாளுக்குநாள் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
எனினும் அவசர சிகிச்சைக்காக வருவோர், அத்தியாவசிய பணிக்கு வருவோர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியிலுள்ள தமிழ்நாட்டு தொழிலாளர்களை அம்மாநில அரசு வெளியேற்றி வருகிறது. பேருந்துகள் இயக்கப்படாததால் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அவர்கள் வாளையாறு சோதனை சாவடிக்கு வந்த வண்ணம் உள்ளனர். கேரள மாநில அரசின் இச்செயலுக்கு தமிழ்நாடு சுகாதாரத் துறையினர், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா முன்னெச்சரிக்கை: மாநகராட்சிக்கு 17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய அரசு