பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக தொலைபேசி மூலம் அதிக அளவில் புகார்கள் வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் வெளியான வீடியோக்கள் அடிப்படையில் குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி, கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் வெளியிட்டதால், பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் புகாரளிக்கத் தயங்குவதாக மாதர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
மேலும் திருநாவுக்கரசை தவிர்த்து மற்ற 3 பேரையும் கைது செய்யப்பட்ட 15 நாட்களுக்குள் காவலில் எடுத்து விசாரிக்காததால், சிபிசிஐடி-யும் விசாரிக்க முடியாத நிலை இருப்பதாக கூறிய அவர்கள், வீடியோக்களைக் கொண்டு வழக்குப்பதிவு செய்து காவலில் எடுத்து விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தினர்.