தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் வெள்ளை போர்ட் கொண்ட சாதாரண பேருந்துகளில், மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. பல்வேறு மாவட்டத்திலுள்ள பெண்கள் இத்திட்டத்தினை வரவேற்கும் விதமாக கொண்டாடி வருகிறனர்.
கோவை:
தந்தை பெரியார் திராவிடர் கழக மகளிரணியினர் காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு, "சொன்னதை செய்வார் ஸ்டாலின்" என்ற நோட்டீஸ் மற்றும் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இது குறித்து தபெதிக மகளிரணி செயலாளர் லலிதா, ”ஸ்டாலின், திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல நகர அரசு பேருந்துகளின் மகளிர் பயணம் செய்ய இலவசம் என்று அறிவித்ததை நிறைவேற்றியுள்ளார். இதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழக மகளிரணி சார்பில் நன்றியும், வாழ்த்துக்களும். பல பெண்கள் இத்திட்டத்தினால் பயன்பெறுவர். மாதம் ரூபாய்.1000 முதல் 1500 வரை சேமிக்கப்படும். தேர்தல் வாக்குறுதிகளை அவர் ஒவ்வொன்றாக நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி பகுதியில் இயங்கும் நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என்ற ஸ்டிக்கர் ஒட்டும் பணி நடைபெற்று வருகிறது. இலவசமாக பயணித்த பெண்கள் கூறுகையில், “தமிழ்நாடு அரசு மகளிருக்காக இது போன்ற ஒரு திட்டத்தை அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இத்திட்டம் எவ்வித தடைகளும் இன்றி, தொடர்ந்து நடைபெற வேண்டும்” என கோரிக்கை வைத்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் அரசு பேருந்து நிலையத்திலிருந்து சாத்தூர், சிவகாசி, பாவாலி, எரிச்சநத்தம் அழகாபுரி, அருப்புக்கோட்டை, திருச்சுழி, திருமங்கலம், காரியாபட்டி ஆகிய ஊர்களுக்கு நகரப் பேருந்துகள்இயங்குகின்றன. விருதுநகர் அரசு பழைய பேருந்து நிலையத்தில் நேற்றிரவு சாதரண அரசு பேருந்தில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம் என்று ஒட்டப்பட்டது. தொடர்ந்து மாவட்டத்தில் நகரப் பேருந்துகளில் பெண்கள், கரோனா விதிமுறைகளை கடைபிடித்து இலவசமாக பயணம் செய்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்தனர். பெண்களின் நலனுக்கு முன்னுரிமை கொடுப்பதால் எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று பேருந்தில் பயணித்த பெண்கள் கூறினர். மேலும் கூலி வேலைக்கு செல்லும் பெண்கள், ”பேருந்து பயணத்தை இலவசமாக தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி” தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஆண்கள் மட்டுமே கட்டணம் செலுத்தி பயணம் செய்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!