கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் புட் பிரியர் குரூப்புக்குச் சொந்தமான நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் பணிபுரிந்து வருபவர் தேவதாஸ். இவரது மனைவி ஜெயமணி (56). இவர்களுக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், ஜெயமணி இன்று (டிச.30) அப்பகுதியிலுள்ள 44ஆம் நம்பர் காட்டில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக அங்குள்ள சோலையிலிருந்து ஒரு குட்டியுடன் வந்த இரண்டு யானைகள், பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த ஜெயமணியை தூக்கி வீசி, மிதித்தது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
யானையை காட்டுக்குள் விரட்ட கோரிக்கை:
மேலும், அப்பகுதியில் யானை முகாமிட்டிருந்ததால், ஜெயமணியின் உடலை மீட்க முடியாமல் வனத்துறையினர் திணறினர். பின்னர், பல மணிநேரத்திற்குப் பிறகு ஜெயமணியின் உடலை கைப்பற்றினர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், ஜெயமணியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள காட்டு யானைகளைை வனத்துறையினர் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: குட்டி யானையுடன் செல்ஃபி எடுத்த மக்கள்: கோபத்தில் தாக்கிய தாய் யானை!