கோவை: கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் பகுதியைச் சேர்ந்தவர், தனியார் கல்லூரிப் பேராசிரியர் மகேஸ்வரன். இவரது மனைவி சிந்து மோனிகா. திருமணமாகி ஆறு வருடங்கள் ஆன இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதில் வெண்பா என்ற பெண் குழந்தை உள்ளது.
சிந்து மோனிகா, தாய்ப்பால் தானம் செய்வது குறித்து சமூக வலைதளங்களில் பார்த்து, தானும் அதே தாய்ப்பால் தானம் செய்ய வேண்டும் என முடிவு செய்து, திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தாய்ப்பால் சேமிப்புக்காக செயல்பட்டு வரும் 'அமிர்தம்' தாய்ப்பால் தானம் என்ற அமைப்பு மூலம் கடந்த ஆண்டு பத்து மாதங்களில், கிட்டத்தட்ட 55 லிட்டர் தாய்ப்பாலை சேகரித்து, கோவை அரசு மருத்துவமனைக்குத் தானமாக வழங்கியுள்ளார்.
இவரின் இந்த முயற்சி, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் (India Book of Records) சாதனை புத்தகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆசியா மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில், சிந்து மோனிகாவின் இந்த சேவை அங்கீகரிக்கப்பட்டு, அதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இவர் தாய்ப்பால் தானம் செய்வது குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்கள், குழந்தைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், ஒரு தனியார் அமைப்பு மூலம் தனது தலை முடியை முழுவதுமாக தானமாக வழங்கி உள்ளார். இது குறித்து சிந்து மோனிகா கூறுகையில், ''புற்று நோயால் பாதிக்கப்படும் குழந்தைகள், இளம்பெண்கள் சிகிச்சையின் போது, தங்களுடைய தலைமுடியை இழந்து விடுவார்கள் என்பதை தன்னுடைய நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டதாக'' தெரிவித்தார்.
மேலும் சில தனியார் அமைப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களின் மன வலியைப் போக்கும் வகையில் விக் (செயற்கை முடி) செய்து கொடுத்து வருவதையும் அறிந்து கொண்டு, தனது தலை முடி முழுமையும் தானமாக வழங்கியுள்ளார். இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் சிந்து மோனிகாவின் இந்த முயற்சிக்குத் தனது கணவர் முழு ஆதரவு அளிப்பதாகவும், பெற்றோர் உறவினர்கள் என தொடர்ந்து ஆதரவாக இருப்பதாகவும், இந்த சமுதாயத்திற்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருவதாகவும் தெரிவித்தார். தாய்ப்பால் தானம் வழங்கி பல்வேறு விருதுகளை பெற்ற சிந்து மோனிகா தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக தனது சமூக சேவையை துவங்கியுள்ளது அப்பகுதி மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.
இதையும் படிங்க: தந்தைக்கும் உண்டு தாய்ப்பால் ஊட்டுதலில் பங்கு!: ஆய்வாளர்கள் கூறுவது என்ன?