கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அடுத்த சாடிவயலில் யானைகள் முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு சேரன் மற்றும் ஜான் என்ற இரண்டு கும்கி யானைகள் வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த யானைகளுக்கு சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெற்று வருவதால், யானைகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு சிறப்பு உணவுகளும் மருந்துகளும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை திடீரென யானைகள் முகாமிற்குள் புகுந்துள்ளது. அந்த காட்டு யானை அங்கிருந்த சேரன் யானையை கடுமையாக தாக்கியது. இதில் நிலைகுலைந்த சேரன் யானை அங்கேயே விழுந்துள்ளது.
காட்டு யானை தாக்கியதில் சேரன் யானைக்கு முதுகிலும், இடது பக்க பின்னங்காலிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கிருந்த யானைப் பாகன்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் பட்டாசு வெடித்தும் சத்தம் எழுப்பியும், அந்த ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
மேலும் தொடர்ந்து இரண்டு யானைகளுக்கும் பாதுகாப்பாக அருகிலேயே இருந்தனர். இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர், அங்கு வந்த போளுவாம்பட்டி வனச்சரகர் பழனிராஜா யானையின் உடல் நலம் குறித்து பாகன்களிடம் கேட்டறிந்தார்.
கால்நடை மருத்துவர்கள் ஆலோசனைப்படி காயமான யானைக்கு மருந்துகளும் அளிக்கப்பட்டது. எனினும் கோவை மண்டலத்தில் வனத்துறை மருத்துவர்கள் இல்லாததால் இதுவரை சேரன் யானைக்கு உயர் சிகிச்சை அளிக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. இதன்காரணமாக உடல்நலம் பாதிக்கப்படும் விலங்குகள் மற்றும் காயத்துக்குள்ளாகும் விலங்குகள் உயிரிழக்கும் அபாயம் அதிகரித்து வருகிறது.
பல ஆண்டுகளாக கோவை மண்டலத்தில் வனத்துறை மருத்துவர்கள் நியமிப்பதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதற்கு வனத்துறை அதிகாரிகள் இடையே நிலவி வரும் கருத்து வேறுபாடும், மருத்துவரை நியமிப்பதில் உள்ள போட்டி காரணமாக வன விலங்குகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, உடனடியாக கோவை மண்டலத்திற்கு மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் அப்போதுதான் விலங்குகளை காப்பாற்ற முடியும் என்று, வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.