சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி கடந்த டிசம்பர் 23ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
தொடர்ந்து, மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு விசாரணை செய்யவும், மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் மாணவிக்கு நீதி மற்றும் பெண்கள் பாதுகாப்பு கேட்டு பாமக-வின் மகளிர் அணி சார்பாக, போராட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல்துறைக்கு மனு அளித்துள்ளனர். ஆனால், போராட்டத்திற்கு மனுவை காவல்துறை நிராகரித்துள்ளது. இதையடுத்து, போராட்டம் நடத்த அனுமதி வழங்கக்கோரி பாமக மகளிர் அணி சார்பில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்பு முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு!
இதில், போராட்டத்திற்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, "பொது நோக்கத்திற்காக போராட்டம் நடத்தாமல், பத்திரிக்கை விளம்பரத்திற்காக போராட்டம் நடத்தப்படுகிறது. பத்திரிக்கைகள் தனது கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். ஆண், பெண் என்ற பாரபட்சம் நிலவும் இந்த சமுதாயத்தில் வாழ்வதே அவமானமாக அனைவரும் நினைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் கட்சிகள், அரசியல் செய்யாமல் கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்.
மேலும், பெண்கள் பாதுகாப்பு என்ற போர்வையில் பெண்களுக்கான பாதுகாப்பு இன்றளவும் மறுக்கப்படுகிறது. ஒவ்வொருவரின் தாயார், தங்கை மற்றும் மனைவியை, ஆண்கள் தங்களின் பாதுகாப்பில் வைத்துள்ளனர். இந்த மனநிலை மாற்றப்பட வேண்டும். இந்த நூற்றாண்டிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்வது குறித்து நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும்," என வேதனை தெரிவித்துள்ளார்.