கோயம்புத்தூர்: கார் வெடித்த சம்பவம் குறித்து கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான அக்டோபர் 23-ம் தேதி அதிகாலை 4.30 மணியளவில், கோவை கோட்டைமேடு பகுதியில் கார் ஒன்று வெடித்து சிதறி சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் காரில் இருந்த ஜமேசா முபின் உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஜமேசா முபின் வீட்டில், காவல் துறை நடத்திய சோதனையில், வெடிகுண்டு தயாரிப்பதற்கு தேவையான அம்மோனியம் நைட்ரேட், பேட்டரி, இரும்பு ஆணிகள் உளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜமேசா முபினை, ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர் குண்டு வெடிப்பு, கலவரங்கள் என, 25 ஆண்டுகளுக்கு, பயங்கரவாதிகளின் இலக்காக இருந்த மாநகரம் கோவை. கோவை குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரும், அதில் காயமடைந்தவர்களின் இன்னமும் அதிலிருந்து மீள முடியாத நிலையில் உள்ளனர். பெங்களூர், ஐதராபாத், புனே போல பெரிய அளவில் தகவல் தொழில்நுட்ப நகரமாக வளர்ந்திருக்க வேண்டிய கோவை மாநகரின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டது.

எனவே, இந்த கார் வெடிப்பு சம்பவத்தை, சிலிண்டர் வெடிப்பு என, சாதாரணமாக கடந்து சென்று விடக்கூடாது, இது பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கான ஒத்திகை? தீபாவளி கொண்டாடங்களை சீர்குலைக்க நடந்த சதியா? என்பது உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரிக்க வேண்டும் என்று, சம்பவம் நடந்த, அக்டோபர் 23-ம் தேதியே அறிக்கை வெளியிட்டிருந்தேன்.
ஆனால், சம்பவம் நடந்து மூன்று நாட்களாகியும், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் சாதிப்பது பெரும் வருத்தம் அளிக்கிறது. காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது என்றாலும், முதலமைச்சர் என்ற முறையில் ஸ்டாலின், நடந்த சம்பவத்திற்கு கண்டனமாவது தெரிவித்திருக்க வேண்டும்.
1998 போல நடந்து விடுமோ, கோவையின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இருக்கும் கோவை மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், மூன்று நாட்களும் மெளனமாக இருப்பது கண்டனத்திற்குரியது.
கார் வெடிப்பில் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் வெடிகுண்டு தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பதால், இந்த வழக்கை, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணைக்கு தமிழ்நாடு அரசு மாற்ற வேண்டும். இந்த வழக்கை என்.ஐ.ஏ., விசாரிக்க வேண்டும். பயங்கரவாதம் தொடர்பான விஷயங்களில், எவ்வித சமரசத்திற்கு தி.மு.க. அரசு இடம் கொடுத்துவிடக் கூடாது. இல்லையெனில் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு