கோவை : வருகின்ற 2021ஆம் ஆண்டு தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகளில் 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில நாள்களுக்கு முன் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கோவையிலும் ரேஷன் கடைகளில் இந்த டோக்கன்கள் வழங்கப்பட்டன. அதனை வாங்க மக்கள் ஆர்வத்துடன் சென்றனர். அதே சமயம் பல இடங்களிலும் இந்த டோக்கன்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படாமல் தெரு முனைகளிலோ அல்லது வீடுகளுக்குச் சென்றோ வழங்கபட்டு வருகின்றன.
கூட்டுறவுத் துறை மூலம் வழங்கப்படும் இந்த டோக்கன்களில் அரசின் புகைப்படத்திற்கு பதிலாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரின் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதுமட்டுமின்றி ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் டோக்கன்களை வழங்காமல் பல்வேறு இடங்களில் அதிமுகவினரே வழங்கி வருகின்றனர். அதிமுகவினர் வீடுவீடாகச் சென்று டோக்கன் தரும் புகைப்படங்கள் பகிரப்பட்டு வரும் நிலையில், திமுகவினர் உள்பட பல்வேறு தரப்பினரிடையே இச்செயல்கள் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும், இது அரசு சார்பில் வழங்கப்படும் பரிசா அல்லது அதிமுக சார்பில் வழங்கப்படும் பரிசா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
அரசு சார்பில் தரப்படும் பொங்கல் பரிசுப் பொருள்கள் அல்லது உதவித்தொகை என்பது மக்களின் வரிப்பணத்தில் தரப்படுவதாகும். இதில் அதிமுகவினரின் புகைப்படங்கள் எதற்கு என்றும் எதிர்க்கட்சிகள் தற்போது கேள்வி எழுப்பியுள்ளன. இதுகுறித்து, இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக்கும் இதே கேள்வியை எழுப்பியுள்ளார்.
அதிமுக சார்பில் இந்தப் பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டால் இதுபோன்று புகைப்படங்களை அச்சிடுவதில் தவறில்லை, ஆனால், மக்களின் வரிப்பணத்திலிருந்து தரும் இந்தப் பரிசுகள்மீது எதற்கு அதிமுகவினரின் புகைப்படங்கள் என்றும் கோவையில் பல எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு டோக்கன்: அதிமுகவினர் வழங்குவதை நிறுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்!