கோயம்பத்தூர்: கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (மே.14) முதல் ஊரடங்கு விதிகளை மீறி வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை நேற்றைய தினம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கோயம்பத்தூர் மாநகர பகுதியில் காவல்துறையினர் சோதனை சாவடிகள் அமைத்து ஊரடங்கு விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதித்து வருகின்றனர். கோயம்பத்தூர் காந்திபுரம் பகுதியில் சட்டம் ஒழுங்கு மாநகர காவல்துறை துணை ஆணையர் ஸ்டாலின் சோதனை சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி ஊரடங்கு விதிகளை மீற வேண்டாம் என்றும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும், வைரஸ் தொற்று கோவையில் எவ்வாறு உள்ளது, நாம் எப்படி பாதுகாத்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், ’’கோயம்பத்தூர் மாநகர பகுதியில் 50 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு விதியை மீறுவோருக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்க திட்டமிட்டுளோம். முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வைரஸ் தொற்று அச்சத்தை மனதில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும்’’ என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அசாமில் மின்னல் தாக்கியதில் 18 யானைகள் உயிரிழப்பு!