கோவை: பல்வேறு தொழில் துறையினர் பாஜகவில் இணையும் விழா இன்று கோவை பீளமேடு அருகேயுள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில், தொழிற்துறையைச் சேர்ந்த 120 பேர் பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எல். முருகன், "பாஜகவில் தொழில்முனைவோர், இளைஞர்கள், கலைஞர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இணைந்துவருகின்றனர்.
பிரதமர் மோடி ஊழலற்ற ஆட்சியைக் கொடுப்பதால் ஏராளமானோர் தினமும் பாஜகவில் இணைந்துவருகின்றனர். பாஜகவின் மிகப்பெரிய வளர்ச்சியை இதுகாட்டுகிறது. ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைபோல் பல அதிகாரிகள் பாஜகவில் இணையத் தயாராக உள்ளனர். நவம்பர் 21ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகைதரவுள்ள அமித் ஷாவுக்கு பெரியளவில் வரவேற்பு அளிக்க இருக்கிறோம்" என்றார்.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழில், 'சாதியாலும் மதத்தாலும் மக்களை பிளவுப்படுத்துகிற உள்நோக்கம் கொண்ட ஊர்வலங்களை, யாத்திரைகளை அமைதிப்பூங்காவாக திகழும் தமிழ்நாடு ஆமோதிக்காது, ஆதரிக்காது' என வெளியான செய்தி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பணிச்சுமை காரணமாக நமது அம்மா நாளிதழில் வந்தததைப் படிக்கவில்லை எனவும், அதனைப் படித்துவிட்டுதான் கருத்து சொல்ல முடியும் என்றும் தெரிவித்தார்.
நாளை திட்டமிட்டபடி தருமபுரியில் வேல் யாத்திரை தொடங்கும் எனத் தெரிவித்த அவர், கந்தசஷ்டி கவசம் இழிவுபடுத்தப்பட்டதால், மனம் புண்பட்ட பக்தர்களை ஆறுதல் படுத்தவும், மத்திய அரசின் திட்டங்களை கொண்டு செல்லவுமே வேல் யாத்திரை நடத்தப்படுவதாக குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: வெற்றிவேல் யாத்திரை தடையில்லாமல் நடைபெற வேண்டும்: திருப்பதியில் பாஜக தலைவர் எல். முருகன் வேண்டுதல்