கோவை ரயில் நிலையம் முன்பு ஆட்டோ மற்றும் டாக்ஸி ஸ்டாண்டு இயங்கிவருகிறது. இந்நிலையில், நேற்று (செப்.18) மாலை இரயில் நிலைய வளாகத்தில் ஓட்டுநர்கள் வாகனங்களை நிறத்திவிட்டு சிறிது தூரம் தள்ளி ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது, அங்கு நிறுத்தி வைக்கப்படிருந்த செல்லப்பா என்பவரின் ஆம்னி வேனை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் எடுத்துச் சென்றுள்ளார்.
அதைக் கண்டு செல்லப்பா மற்றும் அருகில் இருந்த நண்பர்கள் நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்தில் துரத்தி உள்ளார். துரத்தி வருகையில் வேனை தடுத்த நிறுத்த கோரி சத்தமிட்டுள்ளனர். இவர்களது சத்தத்தை கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், ஆம்னி வேனை தடுத்திநிறுத்தி அதை ஓட்டி வந்த நபரை பிடித்தனர்.
அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, வேனை திருடி வந்த நபர் அன்னூர் பகுதியைச் சேர்ந்த இசக்கி என்பதும், வேலை இல்லாத காரணத்தால் திருடியதாக கூறினார். இதனை தொடர்ந்து அவரை கைது செய்த பந்தய சாலை காவல் துறையினர் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.