கோயம்புத்தூர்: பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக கோவை உக்கடம் பகுதியில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி பல்வேறு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர், நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
அதே போல் குனியமுத்தூர் பகுதியில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழிபாட்டு உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்டத் தலைவர் பெரோஸ்கான் தலைமை வகித்தார்.
இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட தலைவர்கள் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வழிபாட்டு உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும், இஸ்லாமியர்கள் மீது பொய் வழக்கு போடக்கூடாது எனவும்; பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், தமிழ் புலிகள் கட்சி புரட்சிகர இளைஞர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: நாமக்கல்லில் கல்லூரி முதல்வரை எதிர்த்து மாணவிகள் தர்ணா: ஏன்?