கோயம்புத்தூர் தெற்கு தொகுதி 82ஆவது வார்டு வெரைட்டி ஹால் சாலையில் உள்ள சிட்டி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2.50 லட்சம் ரூபாய் மதிப்பில் பள்ளி மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், “மக்கள் சார்ந்த பல்வேறு பணிகளைக் காலையில் இருந்து செய்து வருகிறேன். கணபதி பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்காக அப்பகுதி மக்கள் அங்குள்ள 70வருட பழையான கோயிலை கொடுத்துள்ளார்கள். அதற்கு மாற்று இடமாக காவலர் குடியிருப்பு பகுதியில் 3 சென்ட் நிலத்தை தருவதாக, ஆணையாக வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்த ஆணை வழங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆன நிலையிலும் கூட அறநிலையத் துறை சார்பில் கோயில் கட்டுவதற்கான எவ்விதப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இது குறித்து கேட்கும்போது பல்வேறு காரணங்களை காட்டி அரசு அதிகாரிகள் தட்டிக் கழிக்கின்றனர். இதுபோன்று கோயில்களை அரசு எடுக்கின்றபோது அதற்கு மாற்று இடம் கொடுத்து உடனடியாக அந்த இடத்தில் கோயில்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசிடம் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், டாடாபாத் பகுதியில் தனிநபர் ஒருவர் அவரது தொழிலுக்காக அங்குள்ள கோயிலை எடுக்க வேண்டும் என மனு அளித்ததன் அடிப்படையில் அந்த கோயிலை அதிகாரிகள் அகற்ற வருகின்றனர். சிவானந்த காலனி பகுதியில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அங்குள்ள கடைகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றுவதை நான் வரவேற்கிறேன், அதேசமயம் அப்பகுதியில் உள்ள திமுக மன்றம் அரைகுறையாகக் கட்டி அகற்றப்படாமல் இன்னனும் உள்ளது அதனை அகற்றும் படி நான் பலமுறை மாநகராட்சி ஆணையரிடம் கேட்டுள்ளேன்.
மாநில அரசாங்கம் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் முதலில் கோயில்களை அகற்றுவதில் தான் உள்ளது. ஆனால் கட்சி நிர்வாகிகள் ஆக்கிரமிப்பு செய்வதைக் கண்டு கொள்வதில்லை. கோவை மாநகராட்சியைப் புறக்கணிக்காமல் மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகளைச் செப்பனிட வேண்டும் என்ற கோரிக்கையைத் திரும்பவும் வைக்கிறேன். இந்த மாநகராட்சி நிர்வாகம் கோவையைத் தூய்மைப்படுத்துவதற்காக முதற்கட்ட முயற்சியாக மேம்பால தூண்களில் அழகான சித்திரங்கள் வரையும் முயற்சியை முன்னெடுத்து இருக்கிறார்கள்.
சென்னையிலும் மேம்பாலத் தூண்களில் தமிழர்களின் பெருமையைச் சாற்றும் அழகான சித்திரங்கள் வரையப்பட்டுள்ளது. அதனை நான் மனம் திறந்து பாராட்டுகிறேன். அதுபோன்ற ஒரு முயற்சியைக் கோவை மாநகராட்சியும் முன்னெடுத்துள்ளது. இந்நிலையில் காந்திபுரம் மேம்பாலத்தில் வரையப்பட்ட ஒரு ஓவியத்தில் ஒரு சமுதாயத்தைப் பற்றி தவறான செய்தி வந்திருக்கிறது என்ற காரணத்தினால், அப்பகுதியில் உள்ள அனைத்து சித்திரங்களையும் அழிப்பது என்பதை அரசு கண்காணிக்க வேண்டும். இது போன்ற காரியங்களில் ஈடுபடும் நபர்கள் அதனைத் தவிர்க்க வேண்டும்.
ஈரோடு இடைத்தேர்தலில் தான் ஒட்டுமொத்த அரசாங்கமும் அமர்ந்துள்ளது. மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு படுகொலைகள் நடக்கிறது. தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான சூழ்நிலையில் சென்று கொண்டிருக்கிறது. திமுகவில் இருப்பவர்கள் அல்லது அவர்களது ஆதரவைப் பெற்றிருக்கக் கூடியவர்கள் அரசாங்கம் அவர்களிடத்தில் இருக்கின்றது என்ற காரணத்திற்காக வன்முறையில் ஈடுபடுவது குற்றச் செயல்களில் ஈடுபடுவது என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இது போன்ற செயல்கள் தங்கள் கட்சியைச் சார்ந்தவர்கள் என்ன செய்தாலும் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பதைக் காட்டுகிறது. இது போன்ற நடக்கின்றபோது மாநிலத்தின் முதலமைச்சர் அவர்களது கட்சிக்கு சரியான கட்டுப்பாடுகளை விதித்து சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் கவனத்தைச் செலுத்தாமல் மாநில முழுவதும் உள்ள மக்களின் தேவைகளைப் பார்க்க வேண்டும். பாஜக மற்றும் அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டு வரும் நிலையில் தேர்தல் ஆணையமும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து, கோவையில் நடைபெற்ற கொலை வழக்கில் 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “குற்றச் சம்பவங்களில் விரைந்து நடவடிக்கை என்பது நல்ல விஷயம், ஆனால் அதனை தடுப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும். எடுத்துக்காட்டாக கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் அதன் பின் புலத்தில் ஒரு கூட்டமே இருந்து செயல்படுகிறது என்றால் குண்டுவெடித்த பின்பு நடவடிக்கை எடுக்காமல் அதற்கு முன்பே நடவடிக்கை எடுத்து மக்களை காக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் கடமை.
குற்றச் சம்பவங்கள் அதிகம் நிகழ்வது என்பது ரவுடிகளுக்கு பயமின்மை என்பது அதிகரித்து வருவதை காட்டுகிறது. இல்லையெனில் கட்சியைச் சேர்ந்தவர்களே இது போன்ற வன்முறைகளில் முன்னின்று ஈடுபடுவது என்பதுதான் எங்களது கருத்து இதற்கு முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.
முன்னதாக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசனை வரவேற்று பாஜக கட்சியின் சார்பில் பள்ளி வளாகத்திற்குள் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அவை பள்ளியின் தலைமையாசிரியர் வெள்ளியங்கிரி அறிவுறுத்தலின் பேரில் அகற்றப்பட்டன. பின்னர் அந்த பேனர்கள் பள்ளி வளாகத்திற்கு வெளியே சாலையோரங்களில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வாக்கு சேகரிக்கிறேன் என்ற பெயரில் திமுகவினர் கோமாளித்தனமாக செயல்படுகின்றனர் - ஜெயக்குமார்