மத்திய அரசின் சுயசார்பு பாரத் திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவியாக பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் கடனுதவி பெற்று பயனடைந்துள்ளனர்.
கோயம்புத்தூரிலும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் திட்டத்தின் மூலம் கடனுதவி பெற்று உள்ளனர். அதன் தொடர்ச்சியாக கோவை ரத்தினபுரி பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு இத்திட்டத்தினைப் பற்றி எடுத்துரைத்து அவர்களுக்கு 10,000 ரூபாய் கடன் உதவி பெறுவதற்கான விண்ணப்பத்தை பாஜக மாநிலத் துணைத் தலைவர் வானதி சீனிவாசன் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது மக்களிடம் பேசிய அவர், சாலையோர வியாபாரிகளில் யாருக்கும் கடன் உதவி வேண்டும் என்றாலும் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனடையலாம் என்றும் இது குறித்து வியாபாரிகள் அனைவருக்கும் தெளிவுபடுத்த வேண்டும் என்றும், ஏதாவது குறைகள் இருப்பின் அதைப் பாஜக நிர்வாகிகளிடம் கூறினால் அதை அரசு சரிசெய்ய தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும், இது குறித்து இ-சேவை மையத்தில் வந்து தெரிவித்தாலும் குறைகள் அனைத்தும் தீர்த்துவைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.