கோவை: பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே உள்ள கல்லார்குடி கார்டர் பகுதியில் பாரம்பரியமாக 30-க்கும் மேற்பட்ட பழங்குடியின மலைவாழ் குடும்பங்கள் வசித்துவந்தன. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்தன.
இதனையடுத்து பேரிடர் காலங்களில் அப்பகுதியில் வாழ முடியாது என்பதால் தேயிலைத் தோட்டத்துக்குச் சொந்தமான இடத்தில் மலைவாழ் மக்கள் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் போதிய அடிப்படை வசதி இல்லை, ஒரே குடியிருப்பில் நான்கைந்து குடும்பங்கள் வசித்துவருவதால் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகிவருகின்றனர்.
அறவழியில் போராடி எந்தப் பயனும் இல்லை
தங்களுக்கு தெப்பக்குளம் மேட்டில் இடம் வழங்க வேண்டும் என்று பழங்குடியின மலைவாழ் மக்கள் பலமுறை அலுவலர்களிடம் மனு அளித்தும் பல போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டு முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் இன்று வால்பாறை கல்லார்குடி பகுதியில் மலைவாழ் மக்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
"பாரம்பரியமாக வசித்துவந்த நாங்கள் வீடுகளை இழந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தனியார் இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளோம். எந்தவித அடிப்படை வசதியும் வேலைவாய்ப்பும் இங்குக் கிடைக்காததால் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகிவருகிறோம்.
மாவட்ட ஆட்சியர் தெப்பக்குள மேட்டில் பட்டா வழங்க உத்தரவிட்டு நில அளவை செய்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் இதுவரை அங்கு குடியமர்த்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அறவழியில் பல போராட்டங்கள் நடத்தியும் எந்தப் பயனும் இல்லை.
உண்ணாவிரதப் போராட்டம்
எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக தெப்பக்குளம் பகுதியில் பட்டா வழங்கி குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இன்றுமுதல் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்" என்று பழங்குடியின மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கிராம சபைகளுக்கு மதுவிலக்கைத் தீர்மானிக்கும் அதிகாரம் வேண்டும்