கோவை: மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் உள்ள நகரவை துவக்கப்பள்ளியில் இன்று (ஜூலை 13) தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நள்ளிரவு முதலே அப்பகுதி மக்கள், முதியவர்கள் எனப் பலரும் சாலையிலேயே படுத்து உறங்கி காத்திருந்தனர். இன்று காலை அங்கு வந்த அலுவலர்கள் டோக்கன்கள் குறைந்தளவு மட்டுமே வழங்கியதால் பொதுமக்கள் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மழையையும் பொருட்படுத்தாத மக்கள்
இதேபோன்று, நஞ்சுண்டாபுரம் நாடார் பள்ளியில் உள்ள தடுப்பூசி முகாமில் மழையையும் பொருட்படுத்தாமல் அதிகாலை 3 மணி முதலே பொதுமக்கள் பலரும் குடை பிடித்தபடி நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள காத்திருந்தனர்.
கரோனா தொற்று காலத்தில் இதுபோன்று தடுப்பூசிக்காக பொதுமக்கள் நள்ளிரவு முதலே சாலையில் படுத்தும், மழையில் நனைந்தபடியும் இருக்கும் நிலையால் தொற்று பரவும் இடர் உள்ளது.
மக்கள் கோரிக்கை
எனவே அதிகளவிலான தடுப்பூசிகளை ஒதுக்கித் தர வேண்டும் எனவும், டோக்கன்களை முன்கூட்டியே உரிய தேதிகளுக்கென ஒதுக்கித் தந்துவிட்டால் இதுபோன்று காத்திருக்கும் நிலை ஏற்படாது என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் தடுப்பூசிக்காக மழையில் காத்திருந்த மக்கள்!