கோவை மாவட்டம், பொள்ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் பெண் விடுதலைக் கட்சி சார்பில் சபரிமாலா போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து திமுக வேட்பாளர் மருத்துவர் வரதராஜனுக்கு ஆதரவாக பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவர் பரப்புரை மேற்கொண்டார்.
ஒக்கிலிபாளையம் பகுதியில் அவர் பரப்புரையில் ஈடுபட்டபோது வன்முறையில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது முன்னதாக அவர் புகாரளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தற்சமயம் சபரிமாலா ஜோதி நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு அவரது வீட்டருகே வந்த அடையாளம் தெரியாத நபர்கள், சபரிமாலாவின் கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர். இதையடுத்து சபரிமாலா இச்சம்பவம் குறித்து கிழக்கு காவல் நிலையத்திலும், தனக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி துணை கண்காணிப்பாளர் கே.ஜி.சிவக்குமாரிடமும் மனு அளித்துள்ளார். தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.