கோயம்புத்தூர்: சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் உமா கார்த்திகேயன் (56). பாஜக ஆதரவாளரான இவர், தனது ட்விட்டர் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் உமா கார்க்கி என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார். இவர் சமூக வலைதளங்கள் வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் குறித்து அவதூறான கருத்துகளை பதிவிட்டுள்ளதாக கோவை வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி ஹரீஷ் கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில், அவதூறு பரப்புதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், இரு மதத்தினர் இடையே மோதலை ஏற்படுத்த முயற்சித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் காவல் துறையினர் உமா கார்த்திகேயன் மீது வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, அவரி கடந்த 20ஆம்தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், உமா கார்த்திகேயனை ஒரு நாள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு வியாழக்கிழமை சைபர் கிரைம் காவல் துறையினர், குற்றவியல் நடுவர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 4இல் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி சரவணபாபு விசாரித்தார். அப்போது, அரசு சார்பில் வழக்கறிஞர் பிரசன்ன வெங்கடேஷ் வாதிட்டார்.
இதையும் படிங்க: நேற்று சிறந்த சமூக ஊடக செயற்பாட்டாளர் விருது; இன்று சைபர் கிரைம் போலீசாரால் கைது
பின்னர், மாலை 5 மணி வரை காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து காவல் துறையினர் உமா கார்த்திகேயனை தங்களது காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர், மாலை நீதிமன்றத்தில் உமா கார்த்திகேயனை மீண்டும் ஆஜர்படுத்தி, விசாரிக்க போதிய கால அவகாசம் இல்லாததால் மேலும் ஒரு நாள் காவலில் விசாரிக்க அனுமதிக்குமாறு காவல் துறையினர் மனு தாக்கல் செய்தனர். இதனை ஏற்று நீதிபதி மேலும் ஒருநாள் விசாரணைக்கு அனுமதி வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் உமா கார்த்திகேயனை தங்களது காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர். முன்னதாக மதுரையில் தூய்மைப் பணியாளரை மலம் கலந்த நீரில் கட்டாயப்படுத்தி மார்க்ஸிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் வேலை செய்ய சொன்னதாகவும், இதனை கண்டுகொள்ளாமல் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மௌனம் காப்பதாக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பாக எஸ்.ஜி.சூர்யா மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மீது அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கோவையில் பாஜக நிர்வாகி அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோவை மருதமலையில் யானை தாக்கி ஒருவர் பலி.. வனத்துறை எச்சரிக்கை என்ன?