பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்குள்பட்ட கள்ளிப்பட்டி, ஏரிபட்டி, கொல்லப்பட்டி, திப்பம்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்குள்பட்ட பகுதிகளில் கால்நடை துறை அமைச்சரும், அரசு கேபிள் டிவி நிறுவன தலைவரும், உடுமலை கே. ராதாகிருஷ்ணன் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து அலுவலர்களுடன் கலந்தாலோசித்து மக்கள் குறை தீர்ப்பு முகாமில் பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அத்துடன் கூட்டுறவுத்துறை மூலமாக பொதுமக்களுக்கு வீடு தேடி வழங்கும் நடமாடும் ரேஷன் பொருள்கள் வழங்கும் நிகழ்வினை தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் பொள்ளாச்சி உதவி ஆட்சியர் வைத்தியநாதன் பொள்ளாச்சி வட்டாட்சியர், பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர், கால்நடை பல்கலைக்கழக செனட் உறுப்பினர் கஞ்சம்பட்டி சௌந்தரராஜ், பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் விஜயராணி உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ”பருவ மழையை ஒட்டி கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவர்களை தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மழைப்பொழிவு அதிகமாக இருக்கின்ற பகுதிகளில் அம்மா ஆம்புலன்ஸ் 1692-ஐ அழைத்தால் இருப்பிடத்திற்கே சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் எனவும், இந்தாண்டு கால்நடை பராமரிப்புத் துறைமூலம் 480 மருத்துவர்கள் புதிதாக உருவாக முதலமைச்சரே காரணம். புதிதாக தொடங்கப்படவுள்ள கால்நடை மருத்துவ கல்லூரிகளில் 120 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.